சென்னை: 'தென் மாவட்டங்களில் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்' என்று
முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டமன்ற விதி 110-ன் கீழ் முதல்வர்
ஜெயலலிதா, இன்று ஒரு அறிக்கையை சபையில் தாக்கல் செய்தார். அதில்
கூறியிருப்பதாவது: தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் மூலம்
ஆண்டுக்கு 2 லட்சம் டன் திறன் கொண்ட, இரு புறமும் மேற்பூச்சு செய்யப்பட்ட
அடுக்கு காகித அட்டை தயாரிக் கும் புதிய ஆலை ரூ.1200 கோடியில்
நிறுவப்படும். இது திருச்சி, மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டியில் 989
ஏக்கரில் அமைக்கப்படும். நாகையில் 500 மெகாவாட் திறனுள்ள மிதக்கும் திரவ
எரிவாயு சார்ந்த மின் உற்பத்தி ஆலை, டிட்கோ மூலம் கூட்டுத் துறையில்
ரூ.3,500 கோடியில் செயல்படுத்தப்படும்.
சிவகங்கை அடுத்த மானாமதுரை
சிப்காட்டில் 2,000 ஏக்கரில் கிராபைட் மற்றும் பிற தொழிற்சாலைகளுக்கான
தொழிற்பூங்கா ஏற்படுத்தப்படும். ராமநாதபுரத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு,
உரம் போன்றவை தயாரிக்க 2,000 ஏக்கரில் தொழிற்பூங்கா ஏற்படுத்தப்படும்.
புதுக் கோட்டையில், 2,000 ஏக்கரில் உலோக தொழிற்சாலைகள், உலர் தோல்
தொழிற்சாலை பூங்கா ஏற்படுத்தப்படும். திண்டுக்கல் பகுதியில் பொறியியல்
சார்ந்த தொழிற்பூங்கா 1,500 ஏக்கரில் ஏற்படுத்தப்படும். தேனி மாவட்டத்தில்,
2,000 ஏக்கரில் உணவு பதப்படுத்தல் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.
விருதுநகரில் பட்டாசு, தீப்பெட்டி தொழிலுக்கான உள் கட்டமைப்பு வசதிகள்
மற்றும் அச்சுத் தொழிற் கூடங்களுடன் தொழில் பூங்கா 3,400 ஏக்கரில்
ஏற்படுத்தப்படும். தூத்துக்குடி சிப்காட் நிறுவனத்தால் சுமார் 6000
ஏக்கரில் தொழிற்பூங்கா அமைக்கப்படும். திருநெல்வேலியில் 1,500 ஏக்கரில்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையம் ஏற்படுத்தப்படும்.
கன்னியாகுமரியில்
கடல்சார் தொழிற்பூங்கா சுமார் 250 ஏக்கரில் அமைக்கப்படும். தென்
மாவட்டங்களில் தற்போதுள்ள மற்றும் அமைய உள்ள சிப்காட் தொழிற்பூங்காக்களில்
தொழிற்சாலைகளை அமைக்கும் தொழில் முனைவர்களுக்கு சலுகைகள் அளிக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
thanks to Dinakaran.com!
Labels: south tamil nadu