தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி எப்போது தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்குமா
மதுரை:"வடக்கு வாழ்கிறது..தெற்கு தேய்கிறது...' சில ஆண்டுகளுக்கு முன் வரை திராவிட கட்சிகள் எழுப்பிய கோஷமிது. இக்கோஷம் இப்போது தொழில் வளர்ச்சிக்கு தென் மாவட்டங்களுக்கு ஏற்றதாக உள்ளது. கார் மற்றும் தகவல் தொழில் நுட்பம் போன்ற தொழில் வளர்ச்சி, சென்னையை சுற்றியே அமைகிறது. இது சென்னையை மேலும் நெரிசலாக்குகிறது. 1997ல் தென் மாவட்டங்களில் ஜாதிக் கலவரம் ஏற்பட்ட போது, தமிழக அரசு இதுகுறித்து ஆராய சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ரத்னவேல்பாண்டியன் தலைமையில் குழு அமைத்தது. அக்குழு விசாரித்து தாக்கல் செய்த அறிக்கையில், "வேலைவாய்ப்பின்மையே மோதல்களுக்கு ஒரு காரணம். வேலை வாய்ப்பை ஏற்படுத்த தொழில் வளர்ச்சி ஏற்பட வேண்டும்,' என யோசனை தெரிவித்தது. அரசியல் களத்தை நிர்ணயிக்கும் மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் போக்குவரத்து, கட்டமைப்பு வசதிகள், படித்த இளைஞர்கள், இருந்தும் தொழில் வளர்ச்சி "கானல் நீராக' இருக்கிறது. சென்னை மற்றும் வட மாவட்டங்கள், கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்கள் தொழில் துறையில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளன. மதுரையை மையமாக கொண்ட ஜவுளி நூற்பாலைகள், நெசவு தொழில்கள் பின்னடைவை சந்தித்துள்ளன. புகழ் பெற்ற நூற்பாலைகள் மதுரையில் மூடப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி இல்லை.. மதுரை தொழில் நகராக மாறவில்லை என்பதை விட, லாபகரமாக தொழில் நடத்த முடியுமா என ஆராய வேண்டும் என்கின்றனர் ஒருதரப்பினர்.ஏன் மதுரை உட்பட தென்மாவட்டங்களில் தொழில்வளம் பெருகவில்லை என தொழில் துறை வல்லுநர்களிடம் பேசிய திலிருந்து...மதுரை காமராஜ் பல்கலை தொழில் முனைவியல் துறை தலைவர் ஜெயராமன்: மதுரையில் 1994-95ல் ஒரு கோடி ரூபாய்க்கு வருவாய் ஈட்டிய நிறுவனம், தற்போது 300 கோடி ரூபாய் ஈட்டுகிறது. கிரானைட் கற்கள் ஏற்றுமதி, கண் மருத்துவம் போன்ற துறைகளில் மதுரை நிறுவனங்கள் சாதனை படைக்கின்றன.தொழில்கள் வளர தொழில் முனைவு உணர்வு என்பது தொழில் செய்வோருக்கு வேண்டும். தொழிலில் வெற்றி பெற தொழில் முனைவோர், ஏற்று கொண்டிருக்கும் தொழில், தொழில் நடக்கும் சூழ்நிலை முக்கியம். புதிய தொழில் நுட்பம், சிறப்பானதிறன், கூட்டு சந்தை முயற்சி, மூலப்பொருட்களை வாங்குவதன் மூலம் விலைகளை கட்டுப்படுத்துதல் யுக்திகளை கையாள வேண்டும்.இந்திய தொழில் கூட்டமைப்பு துணை தலைவர் ஷியாம் பிரகாஷ் குப்தா: சென்னை-நெல்லை நான்கு வழிச்சாலை கிடைத்து உள்ளது. மதுரை சர்வதேச விமானங்களை கையாள உள்ளது. தூத்துக்குடி துறைமுகம் வளர்ச்சி கண்டுள்ளது. சென்னையில் கட்டமைப்பு வசதிகள், படித்தவர்கள் இருப்பதாக மனப்பாங்கு நிலவுகிறது. அதை மாற்றினால், தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி ஏற்படும். பி.எச்.இ.எல்., பி.எம்.இ.எல்., போன்ற பெரிய தொழிற்சாலைகள் ஏற்படுத்தினால், அதை சார்ந்து துணை தொழில்கள் உருவாகும். வேலைவாய்ப்பு பெருகும். அதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும்.சாப்ட்வேர் இன்டஸ்டிரிஸ் டெவலப்மென்ட் அசோசியேஷன் தலைவர் சிவராஜா: மதுரையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை தகவல் தொழில் நுட்ப துறையில் மாறியுள்ளது. இங்கு மட்டும் சிறிய, பெரிய 150 தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் செயல்படுகின்றன. இணையதளம் சார்ந்த சேவைகளை இந்நிறுவனங்கள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், வெளிமாநிலங்களுக்கு செய்து கொடுக்கின்றன. கோயில் முழு நிர்வாகத்தையும் மேற்கொள்ள சாப்ட்வேர், மருத்துவ கழகத்திற்கு தேவையான சாப்ட்வேர் போன்றவை செய்து கொடுக்கப்படுகிறது.அரசின் கொள்கைகள், பெரிய ஐ.டி., நிறுவனங்களுக்கு மட்டும் வரி சலுகை அளிப்பதாக உள்ளது. அரசு தகவல் தொழில் நுட்ப பூங்காக்களில், ஏற்றுமதி வருவாய் ஐம்பது சதவீதம் பெறும் நிறுவனங் களுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இத்தகைய விஷயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
Courtesy Dinamalar dot com
Labels: madurai improvement
0 Comments:
Post a Comment
<< Home